top of page

முழுமையாக வசனங்கள் இல்லாமல் உருவாகியுள்ள 'காந்தி டாக்ஸ்' டிரெய்லர் வெளியீடு

  • mediatalks001
  • 18 hours ago
  • 2 min read

'

காந்தி டாக்ஸ்” டிரெய்லர் வெளியீடு: வார்த்தைகளை விட வலிமையாக பேசும் மௌனம்

Zee Studios, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment இணைந்து தயாரித்துள்ள, “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வசனங்கள் இல்லாமல் உருவாகியுள்ள இந்தப்படம், சினிமா மரபுகளை உடைத்து, துணிச்சலான உள்ளடக்கம் மற்றும் கதைசொல்லலை நம்பும் தயாரிப்பாளர்களின் உறுதியை வலுவாக பிரதிபலிக்கிறது.


ஒலி, ஆரவாரம், பிரம்மாண்டம் ஆகியவற்றால் நிரம்பிய இன்றைய சினிமா சூழலில், “காந்தி டாக்ஸ் ” தன்னடக்கத்துடனும் நம்பிக்கையுடனும் வருகை தருகிறது. வசனங்கள் இன்றி, உணர்ச்சியை தூண்டும் காட்சிகள், பதற்றம் நிறைந்த மௌனம், ஆழமான உணர்வுகள் ஆகியவற்றின் மூலம் டிரெய்லர் பலவற்றை சொல்லுகிறது. காதுகளால் மட்டும் அல்ல, பார்வையாளர்களின் உள்ளுணர்வுகளாலும் கேட்க வைக்கும் ஒரு சினிமா அனுபவமாக இது அமைந்துள்ளது.


விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் ஜாதவ் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் , நுணுக்கமும் உள்ளார்ந்த நடிப்பும், உணர்வுப்பூர்வமான மோதல்களும் நிறைந்த சுவடுகளை, டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. வார்த்தைகள் இல்லாததால், முகபாவனைகளும் நடிகர்களின் இருப்புமே கதையின் மையமாக இருக்கின்றது.


படம் குறித்த அனுபவத்தை பகிர்ந்த விஜய் சேதுபதி ..,

“வார்த்தைகள் இன்றி உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற சவாலை ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு அளித்தது. மௌனமே மிக வலுவான உரையாடலாக மாறும் அரிய படம் இது.” என்றார்.


படம் குறித்து அரவிந்த்சாமி கூறுகையில்..,

“சத்தத்தில் மூழ்கிய இந்த உலகில், மௌனம் இன்னும் மனசாட்சியை உலுக்கும் என்பதை ‘காந்தி டாக்ஸ்’ நினைவூட்டுகிறது. இங்கே வார்த்தைகள் விலகி நிற்க, உண்மை அமைதியாக நடந்து வருகிறது. ரஹ்மானின் மேதைமை மிக்க இசையே இத்திரைப்படத்தின் மொழியாகிறது.” என்றார்.


படத்தின் உணர்ச்சிப் பிணைப்பை பற்றி அதிதி ராவ் ஹைதாரி கூறியதாவது..,

“வார்த்தைகளை விட உணர்வுகள் தான் இதில் என்னை அதிகம் நெகிழ வைத்தது. மௌனமும், நுணுக்கமான உணர்வுகளும் ஒன்றோடொன்று அழகாக இணையும் படம் இது.”


சித்தார்த் ஜாதவ் கூறியதாவது..,

“உரையாடலின்றி இவ்வளவு வலிமையாக உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு படத்தின் அங்கமாக இருப்பது உண்மையிலேயே சிறப்பு. வார்த்தைகளைத் தாண்டி பேசும் சினிமாவின் உலகமொழியை இது மீண்டும் நினைவூட்டுகிறது.”


கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், இப்படத்திற்கு, இசை ஜாம்பவான் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இசையே கதையின் குரலாக மாறி, ஒவ்வொரு மௌனத்தையும், பதற்றத்தையும், சொல்லப்படாத எண்ணங்களையும் உணர்ச்சிபூர்வமாக உயர்த்துகிறது.


இசையின் உச்சமான ஏ ஆர் ரஹ்மான் கச்சேரிக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, துணிச்சலான மற்றும் மரபு மீறிய ஒரு முயற்சியாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டு, பாரம்பரிய சினிமா மற்றும் இசையின் சங்கமத்தை கொண்டாடியுள்ளது படக்குழு. இந்த தனித்துவமான விளம்பர அணுகுமுறை, படத்தின் தத்துவத்தை, ஆழமான, அனுபவபூர்வமான மற்றும் கலை நோக்கத்தை பிரதிபலிக்கிறது.


“காந்தி டாக்ஸ்” மூலம், Zee Studios மற்றும் தயாரிப்பாளர்கள் விதிமுறைகளைத் தாண்டி, நுணுக்கமான நடிப்பைக் கொண்டாடும் மற்றும் இந்திய சினிமாவின் எல்லைகளை முன்னுக்கு எடுத்துச் செல்லும் படங்களுக்கான தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.


2026 ஜனவரி 30 அன்று “காந்தி டாக்ஸ்” திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page