top of page

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

mediatalks001
11 hours ago
2 min read

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ (Star Studio18), ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios)மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் மூலம் கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


இரண்டு சிறுவர்கள் ரௌடி பத்தாவின் வீர பிரதாபங்களைப் பற்றி விவாதிப்பதுடன் தொடங்குகிறது ‘பத்தா’ டிரெய்லர். யாராலும் தொட முடியாதவர், அசைத்து பார்க்க முடியாதவர் என பத்தாவின் வீரத்தைப் பற்றிப் பலரும்  பேச அப்படியே திரையில் வரும் காட்சிகள், அவர் மீதான எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன.


தொடர்ந்து, ஆக்ஷன் காட்சிகளுடன் பத்தாவின் பல்வேறு முகங்களை அறிமுகப்படுத்தும் டிரெய்லர், எதிர்பாராத விதமாக அவரது குடும்பஸ்தன் முகத்தையும் காட்டி ஆச்சரியப்படுத்துகிறது. ரௌடியாக அறிமுகமாகும் பத்தாவுக்குள் இருக்கும் மற்றொரு மனிதனை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.


ஆக்ஷன் களமாக நகரும் என எதிர்பார்க்க வைக்கும் டிரெய்லர், அடுத்தடுத்த காட்சிகளில் நகைச்சுவை நிறைந்த தருணங்களுடன் வேறொரு கோணத்திற்கு மாறுகிறது. பத்தாவின் கதாபாத்திரத்தை சுற்றியுள்ள சம்பவங்கள், அவரது பல்வேறு முகங்கள் மற்றும் அவரைச் சுற்றியுள்ள மனிதர்களின் உறவுகள் என டிரெய்லர் முழுவதும் சுவாரஸ்யமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


குறிப்பாக, டிரெய்லரின் இறுதியில் இடம்பெறும் ‘செல்லமே மகளே’ பாடல் காட்சிகள் படத்தின் உணர்வுப்பூர்வமான மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகின்றன. “அப்பா வந்திருவார்ல அம்மா?” என சிறுமி கேட்கும் கேள்வியுடன், ஜெயிலில் இருக்கும் பத்தாவின் காட்சியுடன் டிரெய்லர் நிறைவடைகிறது. இந்த இறுதிக் காட்சிகள், பத்தாவின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்ற கேள்வியை எழுப்புகின்றன.


80-களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் உலகத்தையும் டிரெய்லர் அழுத்தமாகக் காட்டுகிறது. அந்தக் காலகட்டத்தின் தோற்றம், கதாபாத்திரங்களின் உடைகள், காட்சியமைப்பு மற்றும் சூழல் என அனைத்தும் கதையின் காலப்பின்னணியை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன.


அதே நேரத்தில், பத்தா உண்மையில் யார்?, அவரது பல்வேறு முகங்களுக்குப் பின்னால் இருக்கும் கதை என்ன?, ரௌடி பத்தா எப்படி குடும்பஸ்தனாக மாறுகிறார்?, அவர் ஏன் சிறையில் இருக்கிறார்? என பல கேள்விகளை டிரெய்லர் எழுப்புகிறது.


ஆக்ஷன், நகைச்சுவை, குடும்ப உணர்வு மற்றும் மர்மம் என பல்வேறு அம்சங்களை ஒன்றிணைத்து வெளியாகியுள்ள ‘பத்தா’ டிரெய்லர், கதையின் முக்கிய முடிச்சுகளை வெளிப்படுத்தாமல் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.


விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றங்கள் மற்றும் பல்வேறு கதாபாத்திரப் பரிமாணங்கள், 80-களின் பின்னணி, நகைச்சுவை நிறைந்த காட்சிகள், குடும்ப உணர்வுகள் என பல சுவாரஸ்ய அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள ‘பத்தா’ திரைப்படம், திரையில் என்ன அனுபவத்தை வழங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை டிரெய்லர் ஏற்படுத்தியுள்ளது.


‘பத்தா’ திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன், ‘ஜெய் பீம்’ புகழ் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஹரிகிருஷ்ணன், சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அஜய் கோஷ், தீபா வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  


பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சாய் அப்யங்கர்   இசையமைத்துள்ளார். செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவு செய்ய, ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். டி. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பை கவனித்துள்ளார். அஷ்வின் முருகன் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


‘பத்தா’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.



Comments


©2020 by MediaTalks. 

bottom of page