top of page
mediatalks001

கார்த்திக் நரேனின் கதை சொல்லும் திறமையும், இயக்குநராக அவரது திறனும் மேம்பட்டுள்ளது-நடிகர் ரஹ்மான்!



"’துருவங்கள் பதினாறு’ படத்தை விட இப்போது கார்த்திக் நரேனின் கதை சொல்லும் திறமையும், இயக்குநராக அவரது திறனும் மேம்பட்டுள்ளது” நடிகர் ரஹ்மான்!



தென்னிந்திய சினிமாவில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்ற நடிகராக வலம் நடிகர் ரஹ்மான், நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோருடன் இணைந்து நடித்த 'கணபத்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு பான்-இந்திய நடிகராகவும் நிலைநிறுத்திக் கொண்டார். அவரது சமீபத்திய வெப்சீரிஸான ‘1000 பேபிஸ்' அதன் கதைக்களத்திற்காக உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்றது. அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் நரேனின் ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் மூலம் மீண்டும் பார்வையாளர்களைக் கவர உள்ளார். நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார் உட்பட பல திறமையான நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.



இயக்குநர் கார்த்திக் நரேனின் ’துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவில் நடிகர் ரஹ்மான் கம்பேக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



’துருவங்கள் பதினாறு’ மற்றும் ‘நிறங்கள் மூன்று’ என இந்த இரண்டு திரைப்படங்களின் கதாபாத்திரங்களையும் ஒப்பிட்டு நடிகர் ரஹ்மான் பேசியதாவது, “இந்த இரண்டு கதாபாத்திரங்களும் முற்றிலும் வேறுபட்டவை. இரண்டிற்கும் எந்த ஒற்றுமையும் கண்டுபிடிக்க முடியாது. ‘நிறங்கள் மூன்று’ படத்தின் ஸ்கிரிப்ட்டை நான் முதலில் படித்தபோது அதை முதலில் எடுத்து நடிக்க தயங்கினேன். ஆனால், படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் என்றவுடன்  உடனே ஒப்புக் கொண்டேன். நான் இதுவரை செய்திடாத கதாபாத்திரம் இது என்பதால் பரிசோதனை முயற்சியாக இருக்கும் என்று நினைத்தேன்.



படத்தின் கதை மற்றும் தொழில்நுட்பக்குழு இரண்டையுமே கார்த்திக் நரேன் சிறப்பாகக் கையாண்டிருப்பதால் நிச்சயம் பார்வையாளர்களுக்கு தனித்துவமான அனுபவம் கிடைக்கும். ‘துருவங்கள் பதினாறு’ படத்திற்குப் பிறகு கார்த்திக் நரேனின் கதை சொல்லல் முறையும் இயக்கத் திறமையும் இன்னும் பல மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நடிகர்கள் அதர்வா முரளி மற்றும் சரத்குமார் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்” என்றார்.



கருணாமூர்த்தி தயாரித்திருக்கும் இப்படத்தில் அம்மு அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ’நிறங்கள் மூன்று’ திரைப்படம் நவம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


Comments


bottom of page