top of page

‘பன் பட்டர் ஜாம்’ தயாரிப்பாளரின் புதிய த்ரில்லர் படம்

  • mediatalks001
  • 2 days ago
  • 2 min read


ree

ree

ree

திருவண்ணாமலை பின்னணியில் ஸ்பிரிச்சுவல் திரில்லர் படத்தை உருவாக்க தயாராகி வரும் ‘பன் பட்டர் ஜாம்’ தயாரிப்பாளர்

கடந்த ஜூலை மாதம் ரொமான்டிக் காமெடி படமாக வெளியான ‘பன் பட்டர் ஜாம்’ படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் இன்று தெலுங்கில் அந்தப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது..


பிக்பாஸ் புகழ் ராஜூ ஜெயமோகன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியிருந்தார். ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக இந்த படத்தை சுரேஷ் சுப்பிரமணியன் தயாரித்திருந்தார். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த ‘எண்ணித் துணிக’ என்கிற படத்தை தயாரித்தவர். திருச்சியில் பிறந்து தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வரும் சுரேஷ் சுப்பிரமணியன் ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கி அங்கேயும் படங்களை தயாரித்து வருகிறார்.


‘பன் பட்டர் ஜாம்’ படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தான் தயாரிக்க இருக்கும் படங்கள் குறித்த தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்பிரமணியன்.


இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் சுப்பிரமணியன் கூறும்போது,


“’பன் பட்டர் ஜாம்’ படத்தை அமெரிக்காவில் திரையிட்ட போது நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னுடைய முதல் படமான ‘எண்ணித் துணிக’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தேன். ‘பன் பட்டர் ஜாம்’ படத்தில் விக்ராந்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று தான் அந்த கதையை எழுதும்போது நினைத்தேன். ஆனால் அந்த கதாபாத்திரம் பவர்ஃபுல்லானது என்பதால் இன்னும் ஒரு நல்ல அறிமுகமான நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநரிடம் கூறிவிட்டேன்.


‘பன் பட்டர் ஜாம்’ படத்திற்கு முன்னதாக திருவண்ணாமலையை மையப்படுத்திய ஒரு ஸ்பிரிச்சுவல் திரில்லர் மற்றும் இன்னொரு திரில்லர் என இரண்டு கதைகள் பற்றி பேசினோம். ஆனால் இடையில் ‘பன் பட்டர் ஜாம்’ பண்ணலாம் என முடிவு எடுத்து அந்த படத்திற்குள் நுழைந்தோம். இப்போது மீண்டும் இந்த இரண்டு கதைகளில் கவனம் செலுத்த இருக்கிறேன். தயாரிப்புடன் சேர்த்து இயக்குநராகவும் மாறுவதற்கான எண்ணமும் இருக்கிறது.


‘எண்ணித் துணிக’ படத்தைக் கூட கள்வர்கூடம் என்கிற ஸ்டைலில் தான் பண்ணினோம். இயக்குநர் வெற்றிச்செல்வன் அதை கொஞ்சம் கமர்சியலாக மாற்றினார். அடுத்த படம் திரில்லர் ஜானர் என்றாலும் கூட பல படங்கள் அதேபோன்று தற்போது வெளியாகி வருவதால் அதிலிருந்து வித்தியாசம் காட்டுவதற்காக இதுவரை காட்டப்படாத ஒரு லொகேஷன் ஆக தமிழ்நாட்டில் இல்லாத ஒரு நிலப்பரப்பாக காட்ட இருக்கிறோம். அதனால் அமெரிக்காவில் தான் அந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்த ஐடியா இருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு புதுமுகம் அல்லது வளர்ந்து வரும் ஒரு நடிகரை நடிக்க வைப்பதற்கு தான் திட்டமிட்டு இருக்கிறேன். அவர்களை என்னுடைய கதைக்கு ஏற்ற மாதிரி அழகாக உருவமைப்பு செய்து விட முடியும். இதில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நானும் நடிக்க இருக்கிறேன்.


அதே சமயம் திருவண்ணாமலையை பின்னனியாக கொண்டு உருவாக்க இருக்கும் ஸ்பிரிச்சுவல் திரில்லர் படத்திற்கு ஒரு நன்கு பிரபலமான ஹீரோவை தான் நடிக்க வைக்க இருக்கிறோம். இதற்காக பல விஷயங்களை ஆய்வு செய்துதான் இந்த கதையை உருவாக்கி வருகிறோம். எனக்கு பொதுவாகவே புராண, இதிகாச, சயின்ஸ் பிக்சன், ஃபேண்டஸி கதைகள் தான் அதிகம் பிடிக்கும். இப்போது மக்களும் இது போன்ற படங்களை விரும்பி பார்க்கிறார்கள். ஆனால் இப்போது ட்ரெண்டிங் என்பதற்காக தான் ‘பன் பட்டர் ஜாம்’ போன்ற காதல் கதைகளை எடுக்கிறோம். முன்பெல்லாம் ஒரு ட்ரெண்ட் என்பது 10 வருடத்திற்கு இருந்தது. பின்னர் 5 வருடமாக குறைந்து, இப்போது ஒரு வருடத்திற்கு ஒரு ட்ரெண்ட் மாறுகிறது. அதனால் எந்த ஜானரிலும் தற்போது தைரியமாக படம் எடுக்கலாம்.


இன்னொரு பக்கம் ஹாலிவுட் படம் ஒன்றை தயாரிக்கும் முன் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுவும் ஒரு ஸ்பிரிச்சுவல் ட்ராமா தான், படத்திற்கு ‘ஷார்க்கி’ என டைட்டில் வைத்துள்ளோம். இளம் வயது தந்தை ஒருவருக்கு அல்சீமர் காரணமாக சில விஷயங்கள் மறந்து போய் விடுகிறது. வயதான பிறகு ஒரு கட்டத்தில் அவை அவருக்கு மீண்டும் ஞாபகத்திற்கு வர தொடங்கும்போது அவர் என்ன செய்கிறார் என்பதுதான் கதை. மூன்று கதாபாத்திரங்களை மையப்படுத்திய ஒரு ஆந்த்ராலஜி கதை போலவே இது இருக்கும். இதில் ஜெயிலில் இருக்கும் ஒரு கைதியின் கதாபாத்திரத்தில் நான் நடிக்க இருக்கிறேன். இந்த படத்தை நானே இயக்கவும் திட்டமிட்டு இருக்கிறேன். விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளிவரும்.


இன்று ‘பன் பட்டர் ஜாம்’ தெலுங்கில் 200 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகி இருக்கிறது. பத்திரிக்கையாளர் காட்சி திரையிட்ட போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பவன் கல்யாண் நடித்த ‘ஹரிஹர வீர மல்லு’ படத்தை வெளியிட்ட நிறுவனம்தான் இந்த படத்தையும் வெளியிடுகிறது.. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளில் விரைவில் ஓடிடியில் இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அது குறித்த தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும். சினிமாவை ஒரு வியாபாரமாக இல்லாமல் அதை மக்களை பொழுதுபோக்க செய்யும் ஒரு சேவையாகத்தான் நான் பார்க்கிறேன்” என்று கூறினார்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page