top of page

ஜியோ ஸ்டுடியோஸூக்கு நடிகர் வசந்த் ரவி கண்டனம்!



’கண்டநாள் முதல்’, ’கண்ணாமூச்சி ஏனடா’ போன்றப் படங்களை இயக்கிய இயக்குநர் பிரியா இயக்கத்தில் நடிகர்கள் அசோக்செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டப் பல நடித்திருக்கும் திரைப்படம் 'பொன் ஒன்று கண்டேன்'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க அவரது ஒய்.எஸ்.ஆர் ஃபில்ம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் நேரடியாக கலர்ஸ் தமிழ் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் என்று புரொமோவுடன் அறிவிப்பு வெளியான நிலையில், படத்தில் முதன்மை பாத்திரத்தை ஏற்று நடித்துள்ள வசந்த் ரவி அதிருப்தி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவருடைய எக்ஸ் பதிவில், ‘அதிர்ச்சியாக இருக்கிறது! இது உண்மைதானா? ஜியோ ஸ்டுடியோஸ் எனும் இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு அறிவிப்பா? ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் என்ற இந்த அறிவிப்பு அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பிரியா என படம் தொடர்பான எங்கள் யாரின் அனுமதியும் இல்லாமல் வெளியாகி இருப்பது மிகவும் வேதனையாகவும், வருத்தமளிப்பதாகவும் இருக்கிறது. இந்த படத்திற்காக கடுமையாக நாங்கள் உழைத்துள்ளோம். இந்த அறிவிப்பு குறித்து எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எதுவுமே தெரியாது. இந்த படத்தை டிவியில் ஒளிபரப்புவோம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு எங்களுக்கு மரியாதை செலுத்தியதற்கு மிக்க நன்றி ஜியோ ஸ்டுடியோஸ்.

ஒரு நடிகனுக்கோ அல்லது கலைஞனுக்கோ வணிக ரீதியான தயாரிப்பு நிறுவனத்தின் முடிவுகளில் தலையிட முடியாது என்பது உண்மைதான். ஆனால், இதுபோன்ற அறிவிப்புகள் நேரடியாகவோ அல்லது படக்குழு மூலமாகவோ சொல்வதே சரியானது. இப்படி சமூகவலைதள பதிவுகள் மூலமாக எங்களுக்கும் சேர்த்து அறிவிப்பாக வெளியிடுவது சரியல்ல’ என கூறியுள்ளார்.

コメント


bottom of page