சம்பளப் பாக்கி இருப்பதாக கூறியது பொய்.. புரமோஷனுக்கு அபர்ணதி பணம் கேட்டது நிஜம்” - நாற்கரப்போர் இயக்குநர் ஸ்ரீ வெற்றி
V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’. ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் ஸ்ரீ வெற்றி இப்படத்தை இயக்கியுள்ளார்.
குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வரும் சிறூவன் ஒருவன் செஸ் விளையாட்டில் ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆக விரும்புகிறான். அதற்காக அவன் சந்திக்கும் சவால்களையும், அவனது கனவு நிறைவேறியதா? என்பதையும் சொல்லும் அழகான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்த ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது.
‘இறுகப்பற்று’ படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நாயகி அபர்ணதி கலந்து கொள்ளாதது சலசலப்பை ஏற்படுத்தியது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரபல தயாரிப்பாளரும் இந்த படத்தை தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் வெளியிடுபவருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, “புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்காக தனியாக மூன்று லட்சம் ரூபாய் தர வேண்டும் என நாயகி அபர்ணதி தயாரிப்பாளரிடம் கேட்டதாகக் கூறினார்கள். இது குறித்து நான் அபர்ணதியிடமே போன் செய்து விசாரித்த போது என்னிடமும் அதே போன்று அவர் மூன்று லட்சம் ரூபாய் தர வேண்டும் என பிடிவாதம் காட்டினார். ஆனால் இரண்டு நாட்களிலேயே தான் அவ்வாறு பேசியது தவறு என்று என்னிடம் மன்னிப்பு கேட்டவர், இந்த நிகழ்வில் கலந்து கொள்வதாகவும் கூறினார். ஆனால் தற்போது இதில் அவர் கலந்து கொள்ளவில்லை. கேட்டால் அவர் அவுட் ஆப் ஸ்டேஷன் என்று சொல்கிறார்கள். அவர் அப்படியே அவுட் ஆப் ஸ்டேஷனில் இருப்பதுதான் தமிழ் சினிமாவுக்கு நல்லது” என்று சற்றே கோபமாக பேசினார்
நடிகை அபர்ணதி இது குறித்து ஒரு நாளிதழுக்கு பதில் அளித்துள்ளார். அதில், “நாற்கரப்போர் படக்குழுவினர் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு நான் பணம் கேட்பதாக என்மீது அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளனர். நான் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு பணம் கேட்கவில்லை என 200 சதவீதம் உறுதியாக சொல்வேன். படம் முடிவடைந்தும் படத்தின் டப்பிங் பேசுவதற்காகவோ அல்லது புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காகவோ என்னை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் இருந்து யாரும் அழைக்கவில்லை.. நான் இப்போதும் சென்னையில் தான் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல இந்த படத்தில் தனக்கு தரவேண்டிய சம்பளத்தொகை பாக்கி இருப்பதாகவும் தனது குழுவினர் முதலில் அந்த பாக்கித் தொகையை செட்டில் செய்யுமாறு தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ள அபர்ணதி குறைந்தபட்சம் பட ரிலீசுக்கு பிறகாவது உங்களுடைய சம்பளத்தைத் தருகிறோம் என்கிற வார்த்தையைக் கூட அவர்கள் சொல்லவில்லை. இது குறித்து ஒன்றரை வருடத்திற்கு முன்பே பாக்கி தொகையை பெற்றுத்தர வேண்டி நடிகர் சங்கத்தில் நான் புகார் அளித்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் படத்தின் இயக்குனர் ஸ்ரீவெற்றி, அபர்ணதியின் இந்த கருத்தில் துளியும் உண்மையில்லை என்றும் நடந்தது என்ன என்பதையும் விளக்கியுள்ளார்.
இது குறித்து இயக்குநர் ஸ்ரீவெற்றி கூறும்போது, “இந்தப் படத்திற்காக அபர்ணதியிடம் 40 நாட்கள் கால்சீட் பெறப்பட்டு அதற்கான சம்பளமாக ரூபாய் 13 லட்சம் பேசி ஒப்பந்தப்படி முழுத்தொகையும் கொடுக்கப்பட்டு விட்டது. அவரது காட்சிகளை 36 நாட்களிலேயே முடித்து விட்டோம். படத்தின் கதாபாத்திரத் தோற்றத்திற்கு அவர் எவ்வளவு பொருத்தமாக இருந்தாரோ அதேபோல அந்தக் கதாபாத்திரத்தின் குரலுக்கு அவர் குரல் சரியாக பொருந்தாது என்பதால் குரல் கலைஞர் பூமா சுப்பாராவை வைத்து அபர்ணதியின் காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்தேன். அந்த காட்சிகளைப் பார்த்துவிட்டு இதேபோல நானே பேசி விடுகிறேன் சார்” என்று என்னிடம் கோரிக்கை வைத்தார் அபர்ணதி.
இது குறித்து தயாரிப்பாளரிடம் தெரிவித்தபோது மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசினோம். அப்போதுதான் எனக்கு ரூ. 3 லட்சம் கொடுத்து விடுங்கள். நான் புரமோஷன் பண்ணி விடுகிறேன் என்று கூறினார். ஆனால் தயாரிப்பாளர் மேற்கொண்டு பணம் தர இயலாது எனத் தயங்கியபோது, தான் நடித்த முந்தைய பட நிறுவனங்கள், புரமோஷன் நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொள்வதற்கு என தனியாக பணம் கொடுத்திருக்கிறார்கள் என்றும் அபர்ணதி கூறினார். அது மட்டுமல்ல எனக்குப் பணம் கொடுத்தால் போதும்.. நீங்கள் ஏற்கனவே பேசி உள்ள அந்த டப்பிங் குரலிலேயே படத்தை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
அதன்பிறகு 3 லட்சம் பணம் மட்டுமில்லாமல் புரமோஷன் நிகழ்ச்சிக்கு நான் வருவதாக இருந்தால் என கூறி அவர் என்னிடம் விதித்த நிபந்தனைகளை தயாரிப்பாளரிடம் கூறியபோது அந்த வார்த்தைகள் அவரை உலுக்கி விட்டன. அதனால் அபர்ணதி இல்லாமலேயே படத்தை புரமோஷன் செய்து வெளியிடுவோம் என்று முடிவு எடுத்தார். இந்த விவரங்கள் அனைத்தையும் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சுரேஷ் காமாட்சியிடம் கூறியபோது அவரே அபர்ணதியிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரிடமும் இதேபோன்று மூன்று லட்சம் ரூபாய் கேட்டு பிடிவாதம் காட்டி இருக்கிறார் அபர்ணதி. இது தூய்மைப் பணியாளர்கள் குறித்த படம், இதைக்கொண்டு சேர்ப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு என்று அவர் எடுத்து கூறியும், தனக்கு மூன்று லட்சம் தர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார் அபர்ணதி. அப்படி அவர் பேசியதால் தான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வின்போது தன்னுடைய கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் சூழல் உருவானது. சமூகப் பிரச்சினைகளைப் பொறுப்புடன் பேசும் ஒரு படத்தில் பணியாற்றும் கலைஞர்களும் அதே பொறுப்புடன் இருக்கவேண்டும் ’ என்று கூறியுள்ளார்.
Comments