top of page
mediatalks001

‘கிடா ’ - பட விமர்சனம்



மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் தாத்தாவான பூ ராமுவின் ஆதரவில் வளர்கிறார் பெற்றோரை விபத்தில் பறிகொடுத்த பேரனான மாஸ்டர் தீபன்.


வேலை கிடைக்காமல் பண பிரச்சனையுடன் வறுமையில் திண்டாடும் தாத்தா பூ ராமுவிடம் பேரன் மாஸ்டர் தீபன் தீபாவளிக்கு துணி எடுத்து தர சொல்லி கேட்கிறான்.


மற்றொரு பக்கம் கறிக்கடையில் வேலை பார்க்கும் காளி வெங்கட் குடி பழக்கம் உள்ளவர்.

தினமும் குடித்து விட்டு வேலைக்கு தாமதமாக வருவதால் முதலாளி மகனுடன் ஏற்படும் சண்டையால் அங்கிருந்து வெளியேறி, தீபாவளியன்று சொந்தமாக கறிக்கடை திறக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.


ஆனால், பணம் இல்லாததால் அவரால் ஆடு வாங்க முடியவில்லை. இருந்தாலும், சொன்னதை செய்வதற்காக ஒரு ஆட்டையாவது வாங்கி தீபாவளிக்கு கறிக்கடை போட்டே தீருவேன் என்பதில் தீவிரம் காட்டுகிறார்.


இந்நிலையில் தாத்தா பூ ராமு தன் பேரன் ஆசையாக கேட்ட ஆடையை வாங்கி கொடுப்பதற்கு கையில் பணமில்லாதலால் மாஸ்டர் தீபன் ஆசையோடு வளர்த்த ”கிடா”-வை பணத்திற்காக விற்க ஆளை தேடுகிறார்


தீபாவளியன்று சொந்தமாக கறிக்கடை திறக்க நினைத்த காளி வெங்கட்டுக்கு பூ ராமு ஆடு விற்க முயற்சிப்பதை தெரிந்துகொண்டு சாமிக்கு நேர்ந்து விட்ட கிடா என்றாலும் பரவாயில்லை என் அந்த ஆட்டை வாங்க முடிவு செய்கிறார்.


கிடாவை விற்றால் பேரனுக்கு புத்தாடை வாங்க தனக்கு பணம் கிடைக்கும் என பூ ராமு நிம்மதியடையும் நேரத்தில் அந்த கிடா ஆடு ஒரு கும்பலால் இரவில் திருடப்பட்டு விடுகிறது.


விடிந்தால் தீபாவளி என்ற நிலையில், திருடிய ஆட்டை பூ ராமும் ,, காளி வெங்கட்டும் தேடி செல்ல, முடிவில் திருடப்பட்ட கிடா ஆடு அவர்களுக்கு கிடைத்ததா?


தீபாவளி அன்று காளி வெங்கட் நினைத்தபடி கறிக்கடை போட்டாரா ?


தன் பேரன் ஆசைப்பட்ட புத்தாடையை பூ ராமு தீபாவளியன்று வாங்கி கொடுத்தாரா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘கிடா’


வயதான ஏழை விவசாயியாக நடிக்கும் பூ ராமு உணர்ச்சிமயமான காட்சிகளில் இயல்பான நடிப்பில் கண்கலங்க வைக்கிறார் .


கறிக்கடையில் வேலை செய்யும் தொழிலாளியாக காளி வெங்கட் பாராட்டும்படியான நடிப்பில் முத்திரை பதிக்கிறார் .


பேரன் கதிராக நடிக்கும் மாஸ்டர் தீபன், பூ ராமுவின் மனைவியாக நடித்திருக்கும் பாண்டியம்மா, காளி வெங்கட்டின் மனைவியாக நடிக்கும் விஜயா, காளி வெங்கட்டின் மகனாக நடிக்கும் பாண்டி, பாண்டியின் காதலியாக நடிக்கும் ஜோதி, ராஜு, கருப்பு, திருடர்களாக வரும் ஆனந்த், ஜெய், தேவா, சங்கிலி என படத்தில் நடிக்கும் அனைவருமே கதையுடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளனர் .


எம்.ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவும் , தீசன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம் !


தீபாவளிக்கு பேரனுக்கு புத்தாடை வாங்கி கொடுக்க பணத்திற்காக போராடும் ஏழை விவசாயி, பணம் கிடைக்காததால் சாமிக்கு நேர்ந்து விட்ட கிடாவை விற்க முற்படும்போது 'கிடா' திருடுபோகிறது காணாமல் போன கிடா ஆட்டை தேடி செல்லும் பயணத்தை மையமாக வைத்து ,,ஒரு சிறுவனுக்கும் கிடா ஆட்டுக்கும் உள்ள அன்பான உறவுடன் மதுரை மக்களின் இயல்பான வாழ்வியலை திரைக்கதையாக அமைத்து அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய உணர்வுபூர்வமான படமாக இயக்கியுள்ளார் ரா .வெங்கட்


ரேட்டிங் - 4 / 5


'கிடா' - மண் மணம் மாறாத இயல்பான படைப்பு !

Comments


bottom of page