“வள்ளி மயில்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் "வள்ளிமயில்". 80களின் நாடகக்கலை பின்னணியில் பரபரப்பான திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில்
இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…
நல்லுசாமி பிக்சர்ஸுடன் எனக்கு இது 4 வது படம். வள்ளி மயில் ஒரு க்ரைம் திரில்லராக ஆரம்பித்த படம். ஒரு வில்லனைப் பின்னணியாகக் கொண்டு கதை நடக்கும். பிரகாஷ்ராஜ் சார் மிரட்டியிருக்கிறார். இமான் சார் உடன் 7 வது படம், இன்னும் நிறையப் படங்கள் வேலை செய்வோம். விஜய் ஆண்டனி சாருடன், முதல் முறையாக வேலை செய்கிறேன். உங்கள் படம் சார் நீங்கள் சொல்வதை செய்கிறேன் என்று வந்தார், அவருக்கு நன்றி. வெண்ணிலா கபடிக் குழு படத்திற்குப் பிறகு நிறையக் கதாபாத்திரங்கள். சத்யராஜ் சார் மிக முக்கியமான ரோல், அவரைச் சுற்றி 4 பேர் அதே போல், விஜய் ஆண்டனியை சுற்றி 4 பேர் எனப் பெரிய கூட்டம் படத்தில் இருக்கும். ஃபரியா அப்துல்லா மிக முக்கியமான ரோல், அற்புதமாக நடித்துள்ளார். மிகச் சிக்கலான கதை, அதை மிக எளிமையாகச் சொல்ல முயன்றுள்ளோம். எனக்காக இப்படத்தில் கடுமையாக உழைத்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கு நன்றிகள். இந்தப் படம் உருவாக்கியது மிக இனிமையான அனுபவம். இது டீசர் விழா தான், இன்னும் நிறைய விழா இருக்கிறது. இன்னும் நிறைய பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
ஆடை வடிவமைப்பாளர் ராதிகா கூறியதாவது..,
இந்த படம் 80 காலகட்டத்தில் இருப்பதால் எனக்கு அதிக வேலை இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளோம், பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளோம். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை. நன்றி.
பாடலாசிரியர் விவேகா கூறியதாவது..,
வள்ளி மயில் தூய தமிழ் பெயர், பெயரே மிக அழகாக அமைந்துள்ளது. விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக அவருக்கு நிறையப் பாடல்கள் எழுதியுள்ளேன். ஆனால் நடிகராக இது முதல் படம். மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இமான் உடன் ஆரம்ப காலத்தில் இருந்து வேலை பார்க்கிறேன். இயக்குநர் சுசீந்திரன் அவர்கள் சமூகப் பொறுப்புள்ள இயக்குநர். ஒரு நல்ல படைப்பை தந்துள்ளார். இந்த படத்தில் பணியாற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் பிரவீன் பேசியதாவது..
இந்தப் படம் மிக அற்புதமான படம். நான் பைனான்ஸியராக வந்தேன், இப்படம் பிடித்துத் தயாரிப்பில் பங்கு கொண்டேன். மிக அற்புதமான அனுபவம். விஜய் ஆண்டனி கடுமையாக உழைத்துள்ளார். சுசீந்திரன் மிக சூப்பராக உருவாக்கியுள்ளார். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
சண்டை பயிற்சி இயக்குநர் ராஜசேகர் பேசியதாவது..
இப்படத்தில் சுசீந்திரன் அவர்களிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். விஜய் ஆண்டனி சொன்னதை அப்படியே செய்வார். மிகவும் ஒத்துழைப்புத் தந்தார். சத்யராஜ் சாருக்கு ஃபைட் இல்லை என்பது வருத்தம். படம் பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் நன்றி.
இசையமைப்பாளர் இமான் பேசியதாவது..
நல்லுசாமி பிக்சர்ஸுக்கு நன்றி. சில வருடங்களுக்கு முன் சுசீந்திரன் சார் இந்தக் கதை சொன்னார். அங்கு ஆரம்பித்த படம் இன்று முழுமையாக வந்திருப்பதைப் பார்க்க சந்தோஷமாக உள்ளது. விஜய் ஆண்டனி சாரை ஆரம்ப காலங்களில் இருந்து தெரியும். சவுண்ட் இஞ்சினியராக அவரைச் சந்தித்துள்ளேன். கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் அவரது வளர்ச்சி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சுசீந்திரன் எப்போதும் சினிமா பத்தி மட்டுமே பேசிக்கொண்டு இருப்பார். அவருக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். சத்யராஜ் சார் நடித்த படத்திற்கு இசையமைத்திருப்பது மகிழ்ச்சி. இந்த படத்தில் பணியாற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது..,
சுசீந்திரன் சார் உடன் வேலை பார்த்தது மிக நல்ல அனுபவம். பிச்சைக்காரன் படமெடுக்கும் போது, இந்தப் படம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் நிகழ்ந்தது. இந்த படத்தில் இயக்கம் பற்றி நான் நிறையக் கற்றுக்கொண்டேன். சுசீந்திரன் சாருக்கு நன்றி. சத்யராஜ் சாருடன் இணைந்து திரையில் நடிப்பது மிக மகிழ்ச்சி, அவருக்கு நான் ரசிகன். இமானுக்கும் நான் ரசிகன். அவரது இசை குறித்து எனக்கு எப்போதும் ஆர்வம் இருக்கும். அவரது அப்பா எனக்கு நெருக்கம். அவரது வளர்ச்சி, மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் வித்தியாசமான படம். உங்களுக்குப் பிடிக்கும். படக்குழு அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
நடிகர் சத்யராஜ் பேசியதாவது…
நாம் நடிக்கும் நிறைய படங்களில் நம் கொள்கைகள் பற்றி எல்லாம் பேச முடியாது. வேலை பார்க்க வந்துள்ளோம் அதை மட்டும் செய்ய வேண்டும் எனச் செய்துவிட்டுப் போவோம். ஆனால் இந்தப் படம் என் கொள்கைகள் பேச முடிந்த படமாக அமைந்தது மகிழ்ச்சி. சுசீந்திரன் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக எடுக்கிறார். இன்னொரு கதை வைத்துள்ளார், அது வந்தால் இன்னும் மிகப்பெரிய படமாக வரும். விஜய் ஆண்டனி மிகச்சிறந்த மனிதர், தனக்கு என்ன வரும் என்பதில் தெளிவானவர். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. வள்ளி மயில் எனப் பெண் கதாப்பாத்திர பெயரில் தலைப்பு வைத்ததற்கு மகிழ்ச்சி. அதற்கு ஒப்புக்கொண்ட விஜய் ஆண்டனிக்கு நன்றி. இமான் பற்றி மிகச் சிறந்த விஷயங்கள் கேட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த ஒரு படத்திற்கு சம்பளமே வாங்காமல் இசையமைத்தார், உங்கள் மனதிற்கு நன்றி. ஃபரியா மிகச்சிறந்த நாயகி, எது சொன்னாலும் உடனே செய்வார். புதுமையான கதைக்களம். இப்படத்திற்காக உங்களைப்போல் நானும் காத்திருக்கிறேன் நன்றி.
இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பாஸ்கர் சக்தி வசனம் எழுதுகிறார். ஒளிப்பதிவு - விஜய் சக்ரவர்த்தி, எடிட்டர் - ஆண்டனி, ஆர்ட் டைரக்டர் - உதயகுமார், மக்கள் தொடர்பு - சதீஷ் AIM, பப்ளிசிட்டி டிசைன்ஸ் - ட்யூனி ஜான் ஆகியோர் குழுவில் பணியாற்றுகின்றனர். இவர்களுடன் அறந்தாங்கி நிஷா, கனி அகத்தியன், புஷ்பா புகழ் சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி பி முத்து, தயாளன் உட்பட பல நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
Comments