சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் பரபரப்பான திரு.மாணிக்கம் திரைப்படம், விரைவில் திரையில் !!
மாணிக்கம் என்ற ஒரு மனிதன் எப்படி திரு.மாணிக்கமாக உயர்கிறான்... என்பதே இந்தப் படத்தின் அடிப்படைக் கதை.
தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்கப் படைப்புகளைத் தந்த முன்னணி இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பரபரப்பான திரு.மாணிக்கம் திரைப்படம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்தப் படத்தின் FIRST LOOK ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது
ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா... அதற்கான சாத்தியம் இருக்கின்றதா... என்ற கேள்விகளோடு இந்தப் படம் தொடங்குகிறது... கதையின் நாயகன் மாணிக்கத்தின் மனைவி... அவனுடைய பெரியப்பா... பெரியம்மா... மச்சினன்... மாமியார் இப்படி ஒரு கூட்டமே தனி மனிதன் மாணிக்கத்தை நேர்மையாக இருக்க விடாமல் துரத்துகிறது...
கூடவே அராஜகம் பிடித்த போலீஸ்காரர்களும்... அவனைத் தொடர்ந்து துரத்துகிறார்கள். இவர்கள் எல்லோரையும் தாண்டி மாணிக்கத்தின் மனசாட்சியும் அவனைத் துரத்துகிறது...
இந்தப் போராட்டத்திலிருந்து மாணிக்கம் எப்படித் தப்பித்து நேர்மையான ஒரு காரியத்தைச் செய்கிறான் என்பதுதான் பரபரப்பாக எடுக்கப்பட்டிருக்கும் திரு.மாணிக்கம் படத்தின் சாராம்சம்...
‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குநர் நந்தா பெரியசாமி இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்
ஆதங்கம்... ஆற்றாமை... தவிப்பு... தடுமாற்றம் எனப் பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜாவும், நாசரும் இதுவரை நாம் பார்க்காத தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன், ஆகியோர் வேறொரு புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கிறார்கள்.
சமுத்திரக்கனி மூலம் ‘நாடோடிகள்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யா சமுத்திரக்கனிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
‘சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்தில் கவரவிருக்கிறார்.
பாடலாசிரியர்கள் சினேகன், ராஜூமுருகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார்.
ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியும் அவனைக் கேள்வி கேட்கும் அற்புதமான படைப்பாக உருவாக்கியுள்ள இப்படத்தை GP ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் FIRST LOOK, TEASER பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்
Comments