"பராசக்தி" - விமர்சனம்
- mediatalks001
- 1 hour ago
- 2 min read

டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா, ,குரு சோமசுந்தரம், சேத்தன், ராணா டகுபதி, காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பராசக்தி’ இத்திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
1959ஆம் ஆண்டு கால கட்டத்தில் தமிழ்நாடு கடந்து வந்த மொழிப் போராட்ட வரலாற்றை நினைவூட்டுகிற படமாக ‘பராசக்தி’ படம் உருவாகி இருக்கிறது. .
மதுரையில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் நாயகன் சிவகார்த்திகேயன் இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர்களுடன் புறநானூறு படை என்ற பெயரில் மாணவர் இயக்க படையின் தலைவனாக தலைமை தாங்கி இந்தி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்தி மொழிக்கு எதிராக உருவான அந்த இயக்கம் மக்கள் மத்தியில் புரட்சியாக வளர்ந்து சிவகார்த்திகேயன் தலைமையிலான மாணவ படையினர் இரயிலை வழிமறித்து எரிக்கிறார்கள்
இச் சுழலில் இரயில் எரிப்பு சம்பவத்தில் தனது நண்பனின் இழப்பால் சிவகார்த்திகேயன் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு ரயில்வே துறையில் சாதாரண ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அந்த நேரத்தில் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1965 வரை இந்தி மொழியை திணிக்க மாட்டோம், அவரவர் தாய் மொழியிலே அலுவல்கள் மேற்கொள்ளலாம் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் என உத்தரவு பிறப்பிக்கிறார்.
அப்போது இந்தியா முழுவதும் இந்தி மொழி கட்டாயம் பள்ளிகளில் சொல்லித் தர வேண்டும். மாணவர்கள் இந்தியை படித்தே தீர வேண்டும் என்ற உத்தரவு ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வருகிறது.
இந்த சூழலில் மத்திய அரசில் உள்ள அமைச்சரின் மகள் ஸ்ரீலீலாவும், சிவகார்த்திகேயனின் தம்பி கல்லூரி மாணவனான அதர்வாவுடன் சேர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களில் வெளியே தெரியாமல் கலந்துகொள்கிறார் . தெலுங்கு மொழிப் பேசும் பெண்ணாக இருந்தாலும் மொழி உரிமையின் வலியை புரிந்து கொண்டு இந்த போராட்டத்திற்கு துணை நிற்கிறார்
கல்லூரி மாணவனான அதர்வா வெளியே தெரியாமல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும்போது ஒரு கட்டத்தில் அண்ணன் சிவகார்த்திகேயன் கண்டுபிடித்து அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கிறார். ஆனால் அதர்வா தன்னுடைய கொள்கையில் தீவிரமாக இருக்க தம்பியின் காலை உடைத்து வீட்டிலேயே முடங்க செய்து விடுகிறார்.
இதற்கிடையே, போராட்டங்களை கட்டுப்படுத்தி, போராட்டக்காரர்களை அழித்து ஒழிப்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரியான ஜெயம் ரவி, தனது பணியில் வெறித்தனமாக செயல்படுகிறார்.
இந்தித் திணிப்புக் கொள்கையினால் தமிழர்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். சிவகார்த்திகேயனும் இந்தி மொழியால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படுகிறார். மறுபக்கம் அவரது தம்பி அதர்வா மற்றும் அவரது நண்பர்கள் இந்தித் திணிப்புக்கான தங்களது போராட்டங்களைத் தீவிரப்படுத்துகிறார்கள்.
அப்போது தமிழ் நாட்டின் முதல்வராக இருந்தவர் இந்த மொழிப் போராட்டத்தை எப்படியாவது எந்த வகையிலாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்று துடிக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பே தராமல் கல்லூரி மாணவர்கள் போராட்டம் மக்களின் ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டிருக்க, ஐபிஎஸ் அதிகாரியான ஜெயம் ரவி அந்தப் போராட்டத்தை அடக்க துணை ராணுவ படையையே அழைத்து வருகிறார். அவர் அழைத்து வந்த ராணுவத்தினரும் போராட்டத்தை கலைக்க துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்துகிறார்கள். இந்தத் துப்பாக்கி சூட்டில் சிவ கார்த்திகேயனின் தம்பி அதர்வா பரிதாபமாக உயிரிழக்கிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருக்கின்ற படம்தான் "பராசக்தி"
செழியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து ஒரு முதிர்ச்சியான நடிப்பை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை வழி நடத்தி செல்லும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல், பாசம், நட்பு, சண்டை என அனைத்திலும் அசத்தலான நடிப்பில் கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார்.
இதுவரை நாயகனாக பார்த்து பழக்கப்பட்ட போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரவிமோகன் வில்லனாக கண்களாலே நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீலீலா தமிழில் அறிமுகபடம் போல இல்லாமல் இயல்பான நடிப்பால் கவர்கிறார்.
சிவகார்த்திகேயன் தம்பியாக நடித்திருக்கும் அதர்வா முரளி துடிப்பு மிக்க இளைஞராக நடிப்பில் அசத்தியிருக்கிறார். சேத்தன், குரு சோமசுந்தரம், சிறப்பு காட்சியில் வரும் ராணா என படத்தில் நடித்த அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் காட்சிகளை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தனது நூறாவது படமாக இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
ஒரு வரலாற்றுத் தன்மையோடும் ஒரு திரைப்படத்திற்கான காட்சித் திருப்பங்களோடும் காட்சிகளை தனது சிறந்த ஒளிப்பதிவு மூலம் பதிவு செய்து படமாக்கி இருக்கும் ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனை பாராட்டியே தீர வேண்டும்
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மைய கருவாக வைத்து இந்தி திணிப்புக்கு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்களின் எதிர்ப்பை கையெழுத்து இயக்கம் மூலம் பிரதம மந்திரி முன்னிலையில் நிரூபிக்க முயற்சி செய்யும் காட்சிகளையும், உண்மைச் சம்பவங்களை நினைவுப்படுத்தும் வகையில் ஒரு முழு திரைப்படத்தின் உணர்வுகளை பல திருப்பங்களோடு இயக்கி இருக்கும் சுதா கொங்கரா, இன்றைய இளம் தலைமுறையினர் உணர்ந்துகொள்ள இந்த வரலாற்று பதிவை ஒரு சான்றாக புரிந்துக் கொள்ள இந்த கதையை அழகாக உருவாக்கி வெற்றி பெற்று இருக்கிறார்.
ரேட்டிங் - 4.5 / 5








Comments