'சல்லியர்கள்' - விமர்சனம்
- mediatalks001
- 4 days ago
- 1 min read

சிங்கள ராணுவ படையை எதிர்த்து போரிடும் தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய போராளிகள் காயமடைந்தால், அவர்களை காப்பாற்றுவதற்காக போர்க்களத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவ பிரிவு ஒன்று செயல்பட்டு பதுங்கு குழி மருத்துவமனைகள் அமைக்கப்படுகிறது.
அந்த மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரான நாயகி சத்யா தேவி காயமுற்று உயிருக்கு போராடும் வீரர்களை சிகிச்சை அளித்து காப்பாற்றும் பணியை செய்து கொண்டிருக்கிறார்..அவருக்கு உதவி செய்வதற்காக தலைமை மருத்துவமனையில் இருந்து மருத்துவர் மகேந்திரன் அனுப்பப்படுகிறார்.
இந்த சூழலில் சிங்கள இராணுவம் இந்த மனிதாபிமான பதுங்கு குழி தளத்தை குறிவைத்து அழிக்க திட்டம் போடுகிறது. ஆனால் மருத்துவ சேவையாற்றும் அவர்களுக்கு போராளியாக இருந்தாலும் ராணுவத்தினராக இருந்தாலும் ஒன்றுதான்.உயிருக்குப் போராடுபவர்களை மனிதநேயத்தோடு காப்பாற்றுகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்த்தும் படம்தான் 'சல்லியர்கள்'
பெண் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி சத்யாதேவி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் ஒரு எதார்த்தமான, அளவான நடிப்பு , அதற்கேற்ற உடல் மொழி, வசனம் என அனைத்திலும் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மருத்துவர் செம்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகேந்திரன் சிங்கள ராணுவ வீரருக்கு இரத்தம் கொடுப்பதும் அவர் உயிரை காப்பாற்ற தூக்கி கொண்டு ஓடுவது என இயல்பான நடிப்பால் கவர்கிறார்.
கதாநாயகியின் தந்தையாக மதிழயகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேது கருணாஸ், பேசும் வசனங்கள் அனைத்தும், தமிழ் ஈழ மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற அளவிற்கு மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்.
சிங்கள ராணுவ அதிகாரிகளாக நடித்திருக்கும் திருமுருகன், சந்தோஷ், மோகன் அனைவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தத்தம் கதாபாத்திரங்களுக்குரிய நடிப்பை வழங்கி உள்ளார்கள்.காதலர்களாக வந்து போராளிகளாக மாறும் நாகராஜ் – பிரியலயா ஜோடி ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.
சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவில் தமிழீழ நிலப்பரப்பையும் போர்க் கொடுமைகளையும் சிங்களக் கொடூரங்களையும் காட்சிப்படுத்தி படம் பார்ப்பவர்களை கலங்க வைக்கிறார்.
கென் மற்றும் ஈஸ்வர் ஆகியோரது இசையில், வைரமுத்து மற்றும் டி.கிட்டு ஆகியோரது வரிகளில் பாடல்கள் திரும்ப கேட்கும் ரகம், பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.
சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு பிரமாண்டமாக உள்ளது.
போர்க்களத்தில் உயிருக்கு போராடும் வீரர்களை காப்பாற்றும் மருத்துவர்களை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிட்டு தமிழ் ஈழ விடுதலை போராளிகள் பற்றி இதுவரை சொல்லப்படாத பலவற்றையும் ஒரு திரைப்படத்திற்கு ஏற்றவாறு மிகுந்த சுவாரசியம் கலந்த முறையில் தமிழர்களின் வீரத்தையும், எதிரியானாலும் உயிர்காக்கும் உன்னதப் பெருமையையும் சொல்லி இருப்பதை பாராட்ட வேண்டும்.
மொத்தத்தில், ‘சல்லியர்கள்’ மனித நேயத்தின் அடையாளம்
ரேட்டிங் - 4 / 5








Comments