’பேட்டில்’ - விமர்சனம்
- mediatalks001
- Apr 26
- 2 min read

எலைட் டாக்கீஸ் கே. பாஸ்கரன் தயாரிப்பில் இயக்குநர் நாராயணன் பழனி இயக்கத்தில் ’பேட்டில்’
அர்ஜுன் பிரபாகரன், ஆராத்யா, முனிஷ்காந்த், சரவண சுப்பையா, சுப்ரமணியம் சிவா, சுருளி, காயத்திரி ஆகியோர் நடித்துள்ளனர் .
ராப் பாடகரான அர்ஜுன் பிரபாகரன் ராப் இசை உலகில் மிகப்பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார் . ஒருநாள் பள்ளியில் படிக்கும் சிறுமிக்கு அர்ஜுன் பிரபாகரன் செய்யும் உதவியை பார்த்து அவர் மீது பள்ளி ஆசிரியையான நாயகி ஆராத்யா காதல் கொள்கிறார் .
இந்நிலையில் உள்ளூர் அளவில் நடைபெறும் ராப் பாடல் போட்டியில் நாயகன் அர்ஜுன் பிரபாகரன் வெற்றி பெறுகிறார்.
அர்ஜுன் பிரபாகரன் திறமையை பார்த்து தனிப்பாடல் ராப் ஆல்பம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அவரை ஒப்பந்தம் செய்து கொள்கிறது.
இவர் பாடும் பாடல் மிக பெரிய அளவில் மக்களிடம் வெற்றி பெறுவதால் அர்ஜுன் பிரபாகரன் பெரிய அளவில் வளர்ச்சி அடைவதோடு மக்கள் மனதிலும் இடத்தை பிடிக்கிறார்.
இதையடுத்து அந்நிறுவனம் வெளிநாட்டில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்காக அர்ஜுன் பிரபாகரனை ஒப்பந்தம் செய்கிறது. இதே சமயம் ஆராத்யா பணிபுரியும் பள்ளியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.
ஆராத்யா பணிபுரியும் பள்ளியில் நடக்கும் அவலங்களை ராப் பாடல் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற ஆராத்யா நினைக்க அர்ஜுன் பிரபாகரன் அதை நிறைவேற்ற நினைக்கிறார். ஆனால் இதற்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் அவரது முயற்சிக்கு தடை போடுகிறது.
இதனை அறியும் அந்த தனியார் பள்ளி தாளாளர் சுப்ரமணிய சிவா ஆராத்யாவை கொலை செய்ய நினைக்கிறார். அவரை காப்பாற்ற நினைக்கும் அர்ஜுன் பிரபாகரன் மிகபெரிய விபத்தில் மாட்டிக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார்.
இறுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட நாயகன் அர்ஜுன் பிரபாகரன் உயிர் பிழைத்தாரா ? பள்ளி தாளாளர் சுப்ரமணிய சிவாவிற்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா ? காதலர்களான அர்ஜுன் பிரபாகரன் – ஆராத்யா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே ’பேட்டில்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் அர்ஜுன் பிரபாகரன் திறமையான நடிப்பில் கதாபாத்திரத்துடன் இணைந்து காதல், கடமை, பாசம் என அனைத்திலும் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
ஆசிரியையாக நடித்திருக்கும் நாயகி ஆராத்யா, அழகு தேவதையாக இயல்பான நடிப்பில் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
பள்ளி தாளாளராக வில்லனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, வழக்கமான வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் சரவண சுப்பையா, அரசியல்வாதியாக நடித்திருக்கும் முனிஷ்காந்த், சுருளி, காயத்ரி என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜீவா, இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது . பின்னணி இசை கதையோடு பயணிக்கும் விதத்தில் உள்ளது.
ஒளிப்பதிவாளர் யுவராஜ்.ஆர், ஒளிப்பதிவு காட்சிகள் கதையுடன் பயணிக்கிறது .
இயல்பான காதலுடன் ராப் பாடல் பாடும் இளைஞனின் வாழ்க்கையை மையமாக கொண்ட கதையுடன் தனியார் பள்ளிகள் செய்யும் அட்டுழியங்களால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவதை அழுத்தமாக பதிவு செய்து ரசிக்க வைக்கும் திரைக்கதை அமைப்பில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் நாராயணன் பழனி
மொத்தத்தில் ’பேட்டில்’ (Battle) – ஒரு பாடகனின் போராட்டம்
மதிப்பீடு : 2.5 / 5





Comments