top of page

இயக்குநர் - நடிகர் லோகேஷ் கனகராஜ் பத்திரிக்கையாளர் சந்திப்பு

  • mediatalks001
  • 18 hours ago
  • 3 min read


அல்லு அர்ஜுன் படத்தின் பணிகளை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக கைதி 2 படத்தின் பணிகளை தொடங்க உள்ளேன்' என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் - தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் - ஊடகவியலாளர்களை சந்தித்தார்.


அதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், '' ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஊடகங்களை ஏதேனும் ஒரு வகையில் சந்திப்பது என்னுடைய வழக்கம். 'கூலி' படத்திற்குப் பிறகு... ஊடகங்களை சந்தித்து பேச வேண்டும் என நினைத்து, தற்போது தான் உங்களை சந்திக்கிறேன்.


சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வெளியாகும் செய்திகளுக்கு என்னுடைய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகவும் உங்களை சந்திக்கிறேன்.


'கூலி' திரைப்படம் 35 நாட்கள் திரையரங்குகளில் ஓடி உள்ளது. இதற்காக முதலில் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வசூல் பற்றி நான் பேச விரும்பவில்லை. இது லாபகரமான படம் என்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் எங்களிடம் தெரிவித்து விட்டது. ஆயிரம் விமர்சனங்களை கடந்து அந்த திரைப்படம் 35 நாட்கள் ஓடியதற்கும்... வசூலித்ததற்கும்... ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.‌


சமூக வலைதளங்களில் வெளியான இப்படத்தை பற்றிய விமர்சனம் என்னை யோசிக்க வைத்தது. என்னிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்... இப்படி கதை சொல்வதை தான் விரும்புகிறார்கள்... என பல விசயங்களை நானும் அதிலிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். இதனை என்னுடைய அடுத்தடுத்த படங்களில் இடம்பெறச் செய்து, எதிர்மறை விமர்சனங்கள் அல்லாத படைப்புகளை அளிப்பதற்கு முயற்சி செய்வேன்.


'கூலி' திரைப்படம் வெளியாகும் நேரத்தில் ரஜினிகாந்த் சாரையும், கமல்ஹாசன் சாரையும் சந்தித்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறோம்' என்றார்கள். அது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. கிட்டத்தட்ட 46 வருடங்கள் கழித்து இருவரும் ஒன்றிணைந்து நடிக்கிறார்கள் என்றால்... அது மிகப்பெரிய வாய்ப்பு. அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தை என்னை இயக்கச் சொன்னதே.. எனக்கு பெரிய விசயமாக இருந்தது.


அந்த சூழலில் 'கைதி 2' என்பதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது. அதன் பிறகு இதன் தயாரிப்பு நிறுவனத்திடம் இதைப்பற்றி எடுத்துச் சொல்லி.. இது போன்ற வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என்பதையும் சொல்லி... அந்த படத்தை நிறைவு செய்துவிட்டு வருகிறேன் என்று கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு ஒன்றரை மாதங்கள் இருவருக்காகவும் சின்சியராக கதை எழுதினேன்.‌ இருவரையும் வைத்து ஒரு படத்தை உருவாக்க நினைத்தேன். அதன் பிறகு அவர்கள் இருவரையும் தனித்தனியாக நேரில் சந்தித்து கதையையும் விவரித்தேன். கதையைக் கேட்டு இருவரும் வியப்படைந்தார்கள். ஆனால் இருவரும் தொடர்ந்து ஆக்சன் படங்களில் தான் நடித்துக் கொண்டே இருந்தனர். தற்போது நடித்து வரும் 'ஜெயிலர் 2 ' மற்றும் அன்பறீவ் இயக்கத்தில் உருவாகும் கமல்ஹாசனின் படம் வரை ஹெவியான ஆக்சன் படங்கள்தான். அதனால் இருவரும் ஆக்ஷன் இல்லாமல் மென்மையான திரைக்கதையாக இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினர்.‌ இதை அவர்கள் இருவரும் என்னிடமும் தெரிவித்தனர். அத்தகைய ஸ்டைலில் எனக்கு படத்தை இயக்கத் தெரியாது. இதை அவர்களிடம் தெரிவித்துவிட்டு விலகி விட்டேன்.‌


நான் எப்போது திரும்பி வருவேன் என்று தெரியாததால், 'கைதி 2' படத்திற்கான கால்ஷீட்டை நடிகர் கார்த்தி மற்றொரு இயக்குநருக்கு வழங்கி விட்டார்.‌ இதுதான் நடந்தது.


இதற்கிடையில் கிடைத்த நேரத்தில்... ஆறு ஆண்டுகளுக்கு முன் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்குவதற்கு முன் பணம் வாங்கியிருந்தேன். அந்த கமிட்மெண்ட்டை கிளியர் செய்து விடலாம் என்று இருந்தபோது... எனக்கு மூன்று ஆண்டுகளாக அல்லு அர்ஜுனுடன் தொடர்பு இருந்தது. நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றவும் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தோம். எல்லாம் கூடி வந்ததால்... மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்காக அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறேன்.


இதற்கு இடையில் ஊதியத்தை அதிகமாக கேட்டதால் தான் 'கைதி 2' படத்தின் பணிகள் நடைபெறவில்லை என செய்தி வெளியானது. இது முற்றிலும் தவறு. ஒரு இயக்குநருக்கான சம்பளம் என்பது தயாரிப்பாளரும், சந்தையும் தான் தீர்மானிக்கிறது. நான் எவ்வளவு கேட்டாலும் மார்க்கெட்டில் எனக்கு என்ன மதிப்போ.. அதற்கு ஏற்ற வகையில் தான் எனக்கு சம்பளம் தருவார்கள்.


கடந்த வாரம் 'கைதி 2 'படத்தின் தயாரிப்பாளரையும், மற்றவர்களையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி விட்டேன். என்னுடைய அடுத்த திரைப்படம் 'கைதி 2' வாகத்தான் இருக்கும்.


இதற்கிடையில் LCU நிறைவு பெற்றது என செய்திகள் வெளியானது. LCU என நான் பெயர் வைக்கவில்லை. ரசிகர்கள் தான் ஏற்படுத்தினர். நான் அதை பின்தொடர்கிறேன். இதை நான் மட்டும் முடிவு செய்து, இனி LCU வில் படம் வராது என்று சொல்ல முடியாது. 'கைதி 2', 'விக்ரம் 2', 'ரோலக்ஸ்' இதெல்லாம் என்னுடைய கமிட்மெண்ட். இது எல்லாம் உருவாக்காமல் என்னால் போக முடியாது. அதனால் LCU தொடர்கிறது. அல்லு அர்ஜுன் படம் வெளியான பிறகு இவை மீண்டும் திறக்கப்படும். எங்களுடைய தயாரிப்பில் உருவாகும் 'பென்ஸ்' எனும் படமும் LCU வை சார்ந்தது தான்.


நானும், அமீர் கானும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதாக இருந்தது. அந்த பேச்சுவார்த்தை தற்போதும் தொடர்கிறது. அவருக்கும் நிறைய திட்டமிட்ட பணிகள் இருக்கிறது. அதனால் இருவரும் நாளடைவில் இணைந்து பணியாற்றுவோம்.‌'' என்றார்.


அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் பத்திரிக்கையாளர்களும், ஊடகவியலாளர்களும் கேட்ட அனைத்து கேள்விக்கும் பதிலளித்தார்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page