top of page

கிராமத்து தோற்றம் நான் பண்ணதே இல்ல என்னால நடிக்க முடியுமானு வேற பயம்! -ஆர்யா!



“காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!


ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் வழங்கும், நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!


ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. இப்படம் உலகமெங்கும் 2023 ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது. பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.


ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் கிருபாகரன் பேசியதாவது…

இந்த படத்தின் டிரெய்லரை முன்னதாகவே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, எனக்கு மட்டுமில்லை எங்களின் சென்னை குழு அனைவருக்கும் பிடித்திருந்தது, அதுமட்டுமில்லை மும்பையில் எங்கள் தலைமை நிறுவனத்திற்கும் இதனை அனுப்பினோம் எங்களுக்கு ஏற்பட்ட அதே உற்சாகம் அவர்களுக்கும் இருந்தது அன்றே இந்த படத்தை ஜூன் மாதம் 2 ஆம் தேதி அன்று வெளியிடலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். இப்படிபட்ட படைப்பை அளித்த இயக்குநர் முத்தையாவிற்கு மிகவும் நன்றி, நிச்சயமாகப் படம் உங்களுக்குப் பிடிக்கும் உங்கள் ஆதரவை எங்களுக்கு அளியுங்கள் நன்றி.


நடிகர் மது சூதனன் ராவ் பேசியதாவது...

நான் அதிகமாகப் பேச விரும்பவில்லை , படம் நன்றாக வந்துள்ளது, இந்த படத்தில் அதிக வில்லன்கள் நடித்துள்ளோம் எப்போதும் கதாநாயகர்களை பற்றிதான் எழுதுவீர்கள் இந்த படத்தில் வில்லன்களைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள் நன்றி.


நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது…

இந்தப் படத்தில் நான் கதை கேட்காமலே நடித்தேன். இயக்குநர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது, படத்தில் வரும் உறவுகள் போலத்தான் நாங்கள் ஷூட்டிங் சமயத்திலும் இருந்தோம். படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும் இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.


தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் பேசியதாவது…

இந்தப்படம் பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள். இந்தப்படத்தில் பணம் சம்பாதிக்கிறோமோ இல்லையோ உறவுகளைச் சம்பாதித்துள்ளோம். ஆர்யா மிக மிக நல்ல மனிதர் என்பதை இதில் உணர்ந்தோம். இந்தப்படத்தை இந்த வாய்ப்பை தந்த முத்தையாவிற்கு நன்றி. இந்தப்படம் ஒரு குடும்பத்தில் வாழ்ந்த மாதிரி இருக்கும். எப்போதும் எங்களுக்கு ஆதரவு தந்து வருகிறீர்கள் இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.


நடிகர் R.K விஜயமுருகன் பேசியதாவது..

இயக்குநருடைய இரண்டு படங்களில் நான் நடிக்க வேண்டியதாக இருந்தது, ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அது நடக்கவில்லை. இந்தப்படத்தில் அது நிறைவேறிவிட்டது. இந்தப் படத்தில் நான் டப்பிங் பேச மிகவும் சிரமப்பட்டேன், சண்டைக் காட்சிகளில் ஆர்யா நிறைய உதவி செய்தார், ஆர்யாவிற்கு நன்றிகூறிக்கொள்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு ஆதரவு தாருங்கள்


நடிகர் பாலா ஹாசன் பேசியதாவது…

நான் இதுக்கு முன்னாடி அசுரன் விடுதலை படங்கள் பண்ணியிருக்கிறேன். சில படங்கள்ல வேலை பார்க்கும் போது தான் உறவு முறை சொல்லிக் கூப்பிட முடியும். இந்தப்படத்தில் அப்படித்தான் இருந்தது. வாய்ப்பு தந்த முத்தையா அண்ணனுக்கு, தயாரிப்பாளருக்கு நன்றி.


நடிகர் ரிஷி ரித்விக் பேசியதாவது…

முத்தையா சாருக்கு நன்றி இரண்டாவது முறையாக எனக்கு வாய்ப்பளித்துள்ளார், இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கும் அனைவரும் வில்லனாகத் தான் இருப்போம் ஆனால் அனைவரும் தனித்துவமாக நடித்துள்ளாம். உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி. ஆர்யா மிகச்சிறந்த மனிதர். அவருக்காகவே நிறையக் கஷ்டப்படலாம் என்று தோன்றியது.


கலை இயக்குநர் வீரமணி பேசியதாவது…

முத்தையா சார் கூட பன்ற நாலாவது படம், ஆர்யா சார் டிரெய்லர்ல பார்த்த மாதிரியே மரண மாஸா நடிச்சிருக்கார். ஆர்ட் டைரக்டரோட வேலையே தெரியலைனு சொன்னாங்க அது சந்தோஷம் ஆர்ட் டைரக்டர் வேல தெரியவே கூடாது ஆர்ட் அமைச்சிருக்கது தெரியக்கூடாதென்று முத்தையா சார் சொல்வார் அப்படித்தான் ஒவ்வொரு படத்திலும் வேலை செய்கிறோம். இந்தப்படம் அவர் கூட வேலை பார்த்தது சந்தோசம் நன்றி.


நடிகர் நரேன் பேசியதாவது…

எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி, இது மாதிரி கதாப்பாத்திரம் நான் இதுவரை செய்ததில்லை. இது ஒரு புது அனுபவமாக இருந்தது.. இந்தப் படத்தில் எல்லோரும் உண்மையாகவே ஒரு குடும்பம் போலத் தான் இருந்தோம், படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றியடையும், உங்கள் ஆதரவை இந்த படத்திற்குத் தர வேண்டும். அனைவருக்கும் நன்றி.


நடிகை மீனா பேசியதாவது…

இயக்குநர் முத்தையா சாரை பற்றிப் பல நல்ல விஷயங்கள் உள்ளது. அதில் எதைச் சொல்வதென்று தெரியவில்லை. எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இந்தப்படத்தில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி


நாயகி சித்தி இதானி பேசியதாவது…

என்னுடைய முதல் படம் வெந்து தணிந்தது காடு படத்திற்கு, நீங்கள் நல்ல ஆதரவு கொடுத்தீர்கள் அதே போல் இந்த படத்திற்கும் ஆதரவு தர வேண்டும், அனைவருக்கும் மிகவும் நன்றி மகிழ்ச்சியாக உள்ளது படத்தை தியேட்டரில் வந்து அனைவரும் பார்க்க வேண்டும். ஆர்யா மிகச்சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தார். இந்தப்படம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. நன்றி





இயக்குநர் முத்தையா பேசியதாவது…

இது என்னுடைய எட்டாவது படம். எனது அனைத்து படங்களும் ஒரு உறவைப் பற்றிய கதையாக இருக்கும் ஆனால் இந்த படத்தில் நன்றி உணர்வைப் பற்றிக் கூற முயற்சி செய்துள்ளேன் , படத்தில் அனைத்து கதாபாத்திரமும் ஒரு உணர்வை மற்றும் உறவைச் சொல்லும், படத்தின் கதைக்களம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பது போல அமைந்துள்ளது , நிறைய நகரப் படங்கள் வருகிறது, இந்த கிராமத்து மண் படத்தையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும். இந்தப் படத்தில் அனைவரும் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளனர். தயாரிப்பாளர் மிகப்பெரிய ஆதரவு எனக்குக் கொடுத்தார், மிகவும் நன்றி, படம் மிகவும் அருமையாக வந்துள்ளது உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.


நடிகர் ஆர்யா பேசியதாவது..

முத்தையா சார் பயங்கரமான சிட்டி சப்ஜெக்டோட என்னிடம் வந்தாரு, சார் இது வேண்டாம் ஒரு கிராமத்துப் படம் பண்ணனும் அதுவும் உங்க கூட பண்ணனும்னு சொன்னேன், அவர் இந்தக்கதையோடு திரும்ப வந்தாரு. அவரோட படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும், எமோஷன் எப்பவும் சூப்பரா இருக்கும், சீன் சொல்லும் போதே அழுதுருவாரு. அவர் மாதிரி என்னால நடிக்க முடியுமானு பயமா இருக்கும், நிறைய நிறையச் சம்பவங்கள் கதைகள் சொல்லிக்கொண்டே இருப்பாரு. மிகத்திறமையான இயக்குநர். தயாரிப்பாளர்கள் அவ்வளவு உறுதுணையா இருந்தாங்க. ஜீ ஸ்டூடியோஸ் எப்பவும் எனக்கு பெரிய சப்போர்ட் தந்திருக்காங்க, இந்தப்படத்துக்காகவும் தந்திருக்காங்க அவங்களுக்கு நன்றி. ஹீரோயின் என்ன விட அவங்களுக்கு டயலாக் அதிகம் அவங்களுக்கு நிறைய காட்சிகள் இருக்கு, சாதாரணமா வந்துட்டு போற ஹீரோயின் ரோல் இல்ல. சூப்பரா நடிச்சிருக்காங்க, ஒரு செம்மையான டீம் முத்தையா சார் வச்சிருக்காரு. டெக்னிகலா எல்லோருமே அட்டகாசமா பண்ணிருக்காங்க. எல்லோரும் ஒரு குடும்பமா தான் இருந்தாங்க. என்னோட படங்கள்ல இந்தமாதிரி தோற்றம் பண்ணதே இல்ல உங்களுக்கு பிடிக்கும்னு நம்புகிறேன் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.


இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார்.


“காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்படம் உலகமெங்கும் 2023 ஜீன் 2 ஆம் தேதி படம் வெளியாகிறது.

Komentáře


bottom of page