'லவ் டுடே' மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன்
கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் புதிய படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்க பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார்
திரைப்படத்தின் அறிமுக வீடியோ ரசிகர்களிடம் அதிரடி வரவேற்பை பெற்றுள்ளது
தென் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரித்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது.
கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் இந்த புதிய படத்தை 'ஓ மை கடவுளே' புகழ் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்க பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. இது ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் 26வது படைப்பாகும்.
கலகலப்பு மிக்க உணர்ச்சிப்பூர்வமான இந்த திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆவார். இணை கிரியேட்டிவ் தயாரிப்பாளராக ஐஷ்வர்யா கல்பாத்தி பங்காற்றுகிறார். லியோன் ஜேம்ஸ் இசையில், நிகேத் பொம்மி ஒளிப்பதிவில், பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பில் இப்படம் உருவாகவுள்ளது. நிர்வாக தயாரிப்பாளர்: எஸ்.எம். வெங்கட் மாணிக்கம்.
புதிய படத்தை அறிவிப்பதற்காக காணொலி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஷ்வத் மாரிமுத்துவின் நிஜ வாழ்க்கை நட்பை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள நகைச்சுவை ததும்பும் இந்த வீடியோ, வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
படத்தை பற்றி பேசிய கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, "'லவ் டுடே' திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிரதீப் ரங்கநாதனையும், 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அஷ்வத் மாரிமுத்துவையும் இணைப்பதில் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மகிழ்ச்சி அடைகிறது. இந்த புதிய திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டையும் கட்டாயம் பெற்று ஏஜிஏஸ் நிறுவனத்தின் வெற்றிப்பட வரிசையில் இடம் பிடிக்கும்," என்றார்.
இத்திரைப்படத்தின் தலைப்பு, இதில் நடிக்கவுள்ள இதர நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.
Comments