ரியல் எஸ்டேட் மோசடிகளைப் பற்றிப் பேசி அதன் அநீதிகளைத் தோலுரிக்கிற படமாக 'உன்னால் என்னால்' உருவாகியுள்ளது. ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரித்துள்ளார். கெளதம் ராஜேந்திரன் வெளியிடுகிறார். சிங்கப்பூர் ரவீந்திர சிம்மன் இயக்க மேற்பார்வையில் இப்படத்தை ஏ .ஆர். ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார் .
இப்படத்தின் கதை என்ன?
வறுமையின் காரணமாகக் கிராமத்தில் இருந்து பிழைப்பு தேடி மூன்று இளைஞர்கள் சென்னை வருகிறார்கள். பணத் தேவை அவர்களைத் துரத்த, ஒரு வழியாக அவர்களின் பணத்தேவை தீர்ந்து போகும் ஒரு வாய்ப்பு வருகிறது. ஆனால் அந்த வாய்ப்புக்குப் பின்னணியில் ஓர் அநீதி இருப்பதைக் காண்கிறார்கள்.அது
இவர்களை மனசாட்சிக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தும் நபரின் வாய்ப்பு என்று தெரிகிறது. அந்தத் தருணத்தில் தங்கள் வறுமையைப் போக்க சமரசப் பட்டார்களா? அல்லது மனசாட்சி மனித நேயம் தான் முக்கியம் என்று முடிவு எடுத்தார்களா? என்பதைப் பற்றிப் பேசும் படம் தான் 'உன்னால் என்னால்'.
படம் குறித்துஇயக்குனர் கூறியதாகவது
" உலகமே எந்திரமயமாகி விட்ட இக்காலச் சூழலில் மனிதன் பணத்தைத் தேடி ஓடுகிறான் .பணத்திற்காக எந்த விதமான அநீதிகளையும் செய்யத் தயாராக இருக்கிறான். அப்படிப் பெரிய அநீதி இழைக்கும் ஒரு துறையாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது.இதில் இழப்புகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர்கள் பலர் உண்டு.இடைத்தரகர்களைக் கொண்டு சக மனிதரை எப்படி அதில் ஏமாற்றுகிறார்கள்? தங்கள் சதி வலையில் சிக்கிக் கொண்டவர்களின் வாழ்க்கையை எப்படி நாசமாக்குகிறார்கள் என்பதை இந்தப் படத்தில் கூறி இருக்கிறோம்.உலகளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த ரியல் எஸ்டேட் உலகத்தின் கறுப்புப் பக்கங்களை இதில் புரட்டிக் காட்டியிருக்கிறோம்.மனிதன் எவ்வளவு சாதித்தாலும் தனது மனசாட்சிக்கு உட்பட்டு மனிதநேயத்தோடு வாழ்வதுதான் சிறந்த அறம் என்று இப்படத்தில் கூறி இருக்கிறோம். அது இக்கால பணம் தொடர்பான மனித மனங்களின் பணமா? பாவமா? சுயநலமா? மனசாட்சியா? என்கிற ஊசலாட்டங்களுக்குப் பதில் கூறும் ஒரு தீர்வாக இருந்து படம் பார்க்கும் ரசிகர்களை நல்வழிப்படுத்தும்" என்று கூறுகிறார்.
இப்படத்தில் கிராமத்தில் இருந்து வரும் ஜீவன், ராஜ், கணேஷ் என்ற அந்த மூன்று இளைஞர்களாக ஜெகா ,கே. ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ் நடித்துள்ளார்கள்.மோசடிக் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார்.இதுவரை கதாநாயகியாக வந்து முகம் காட்டியவர், இதில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் மிரட்டி உள்ளார்.சோடா கோபால் பாத்திரத்தில் ரவி மரியா கலக்கியுள்ளார். முற்றிலும் எதிர்பாராத மாறுபட்ட பாத்திரத்தில் ராஜேஷ் நடித்துள்ளார். இவர்கள் தவிர டெல்லி கணேஷ், ஆர். சுந்தர்ராஜன், மோனிகா, நெல்லை சிவா, சஹானா, நிஹாரிகா, லுப்னா அமீர் ஆகி யோரும் நடித்துள்ளனர்
இப்படத்திற்குக் கதை திரைக்கதை வசனம் எழுதி ஏ .ஆர்.ஜெய கிருஷ்ணா இயக்கியுள்ளார்.இப்படத்திற்குப் பிரபல ஒளிப்பதிவாளர் கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஸ்வான் இசையமைத்துள்ளார். இயக்க மேற்பார்வை சிங்கப்பூர் ரவீந்திர சிம்மன், கலை இயக்கம் விஜய் ராஜன், படத்தொகுப்பு எம். ஆர். ரஜீஷ்,
நடன இயக்குநர் கௌசல்யா, சண்டை இயக்குநர் பில்லா ஜெகன் என்று பணியாற்றியுள்ளனர்.
ஆக்ஷன் ரியாக்ஷன் சார்பில் ஜெனீஷ் வினியோகிக்கிறார்.
'உன்னால் என்னால் 'படம் ஜூன் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.
Comentarios