‘சிறை’ - விமர்சனம்
- mediatalks001
- 13 hours ago
- 2 min read

வேலூர் மத்திய சிறையில் ஆயுத படை பிரிவில் தலைமை காவலராக இருக்கும் விக்ரம் பிரபு சிறையில் உள்ள கைதிகளை பாதுகாப்பாக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பணியை செய்து வருகிறார்.
இதில் ஒரு குற்றவாளியை அழைத்துச் செல்லும்போது விக்ரம் பிரபுவிடம் இருந்து அவர் தப்பிக்க முயற்சி செய்ய, தனது கையில் உள்ள துப்பாக்கியை வைத்து அந்த கைதியை சுட்டுவிடுகிறார்.
இதனால் விக்ரம் பிரபு மீது விசாரணை நடந்து கொண்டிருக்க கொலை வழக்கு ஒன்றில் விசாரணை கைதியான அக்ஷய் குமாரை சிவகங்கை நீதிமன்றத்திற்கு இரண்டு காவலர்களுடன் அழைத்துச் செல்லும் பொறுப்பு விக்ரம் பிரபுவிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இரவு நேர பயணம் என்பதால் அரசு பேருந்தில் அக்க்ஷய்குமாரை கையில் விலங்கிட்டு அழைத்துச் செல்கின்றனர்.
இந்நேரத்தில் உணவிற்காக ஒரு இடத்தில் பேருந்து நிற்க, அங்கு காவலர் ஒருவருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனையில் அதை தடுக்க விக்ரம் பிரபு செல்கிறார். அந்த நேரத்தில் மூன்று காவலர்களை விட்டுவிட்டு பேருந்து புறப்பட்டு விடுகிறது.
இந்த சமயத்தில் பேருந்தில் தனியாக விடப்பட்டு வந்த அக்க்ஷய் குமார் அங்கிருந்து தப்பித்துவிடுகிறார்.
இறுதியில் விக்ரம் பிரபுவிடம் தப்பித்த அக்க்ஷய் குமார் மீண்டும் அவரிடம் பிடிபட்டாரா? கொலை குற்றவாளியான அவரது பின்னணி என்ன ? என்பதை சொல்லும் படம்தான் ‘சிறை’
கதையின் நாயகனாக விக்ரம் பிரபு கதிரவன் என்ற கதாபாத்திரத்தில் காக்கி சட்டை அணிந்த காவலராக நடித்துள்ளார். தோற்றம் மட்டுமின்றி உடல்மொழி,வசன உச்சரிப்பு ஆகிய எல்லாவற்றிலும் நேர்த்தியாக நடித்து எதார்த்தமான மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் தலைமைக் காவலராக விக்ரம் பிரபு மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி சில காட்சிகளில் பேசாமல் தன் கண்கள் மூலமாகவே பேசுவதை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது
மற்றொரு நாயகனாக அப்துல் ரவூப் என்ற கதாபாத்திரத்தில் கொலைக் குற்றம் செய்த கைதியாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் அக்க்ஷய் குமார் தனது நடிப்பு மூலம் படம் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்த்து, கண் கலங்க வைத்து விடுகிறார்.
அக்க்ஷய் குமாரின் காதலியாக கலையரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனிஷ்மா அனில் குமார் துறுதுறுவென்ற தோற்றத்தில் .எளிமையான அழகில் அளவான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார்.
விக்ரம் பிரபுவின் மனைவியாக வரும் ஆனந்த தம்பிராஜா கதாபாத்திரக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
காவலராக நடித்திருக்கும் மூணார் ரமேஷ், காதர் பாஷா என்கிற கதாபாத்திரத்தின் மூலம், முஸ்லிம் மக்களைப்பற்றி பேசும் வசனத்தினால் அனைவரது மனதிலும் இடம் பிடித்து விடுகிறார்.
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் கதைக்களத்திற்கு ஏற்றவாறு காட்சிகளை மிக அழகாக படமாக்கி இருப்பதை பாராட்ட வேண்டும்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் படத்திற்கு பெரிய அளவில் பலம் சேர்த்துள்ளார்.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதையை இயக்குநர் தமிழ் உருவாக்கியுள்ளார்.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, தெளிவான திரைக்கதை அமைப்பில் உணர்வுப்பூர்வமான காதல் கதையுடன் காவல்துறை பற்றிய விவரங்களை நுணுக்கமாக மிக எதார்த்தமாக ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் காட்சிப்படுத்தி காவலர்கள் மற்றும் சிறைக் கைதிகள் ஆகியோரின் மன உணர்வுகளை தெளிவாக புரிய வைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’சிறை’ தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளில் ஓன்று
ரேட்டிங் 4 / 5.








Comments