’மார்க்’ - விமர்சனம்
- mediatalks001
- 6 days ago
- 2 min read

2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்த பிறகு காவல் நிலையத்தில் அதிரடியாய் நுழையும் ரவுடி கும்பலிடம் காவல்துறையினர் சிக்கலில் சிக்கும் போது அனல் பறக்க மாஸான எண்ட்ரியுடன் இடைநீக்கம் செய்யப்பட்ட எஸ்.பி கிச்சா சுதீப் அறிமுகமாகிறார்.
மாநில முதலமைச்சர் உடல்நிலை குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும்போது . அவரது மகன் சைன் டாம் சாக்கோ முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு அவரை கொலை செய்துவிடுகிறார். இந்த கொலையை டாக்டர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துவிடுகிறார்.
இந்த சூழலில் முதலமைச்சர் கொலை செய்யப்பட்டதற்கான வீடியோ ஆதாரத்தைத் தேடும் பணியும் மற்றும் ஒரேநாளில் 18 குழந்தைகள் கடத்தப்படுவதும் இடை நீக்கம் செய்யப்பட்ட எஸ்.பி கிச்சா சுதீப்பிற்கு தெரிய வர தனது குழுவுடன் சேர்ந்து ஆதாரத்தை தீவிரமாக தேடி வருகிறார். இதே சமயம் வீடியோ எடுக்கப்பட்ட அந்த செல்போனுடன் டாக்டர் மகன் கடத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
இறுதியில் நாயகன் கிச்சா சுதீப் கடத்தப்பட்ட 18 குழந்தைகளை காப்பாற்றினாரா? சைன் டாம் சாக்கோ முதல்வராவதை தடுத்தாரா? இல்லையா? என்பதே ’மார்க்’ படத்தின் மீதிக்கதை.
நாயகன் கிச்சா சுதீப் கன்னடத்தில் தற்போதைக்கு அவர் மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில் மார்க் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிச்சா சுதீப் ஆக்க்ஷன் அதிரடி காட்சிகளில் தனது நடிப்பில் மிரட்டி இருக்கிறார். குழந்தைகளை காப்பாற்ற போராடுவதும் , அம்மா பாசம், நடனம் என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்
கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்த நவீன் சந்திரா இந்தப் படத்தில் முழுக்க முழுக்க வில்லனாக ஆக்ரோஷமாக நடித்து மிரட்டி இருக்கிறார். சில இடங்களில் மிகை நடிப்பு என்ற கோடு தாண்டினாலும் கொடூரத்தைக் காட்டியுள்ளார்.
இப்படத்தில் விக்ராந்த் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், தொடர்ந்து தயங்காமல் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றால் நல்லதொரு இடத்தை பிடிக்க கண்டிப்பாக வாய்ப்பிருக்கிறது.
குரு சோமசுந்தரம் காமெடி வில்லனாக நடிக்க யோகி பாபுவுக்கு இப்படத்தில் வழக்கமான காமெடி பெரிதாக எடுபடவில்லை.
ரோஷ்னி பிரகாஷ், தீபிக்ஷா, ட்ராகன் மஞ்சு, கோபால்கிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அர்ச்சனா கோட்டி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத், பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப படத்திற்கு மிகப்பெரும் பலத்தை சேர்த்து இருக்கிறார்.
இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் இரவில் படமாக்கப்பட்டாலும், ரசிகர்களுக்கு அந்த உணர்வே ஏற்படாத வகையில் மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சேகர் சந்துரு.
இப்படத்தின் கதையை எழுதி விஜய் கார்த்திகேயா இயக்கி இருக்கிறார். கிச்சா சுதீப்புக்கு பொருத்தமான திரைக்கதை அமைத்து ஒரு மாஸான ஆக்ஷன் கமர்ஷியல் படமாக, உச்சகட்ட காட்சி குழந்தைகள் சார்ந்த சென்டிமென்ட் காட்சிகளில் இயக்குநர் தன் பணியை மிக சிறப்பாக செய்து இருக்கிறார். ஒரு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு பிரம்மாண்டமான காட்சிகளின் மூலம் தன்னை பெரிய பட இயக்குநர் என்று வெளிப்படுத்த முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
ரேட்டிங் -3.5 / 5








Comments